மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் – ஓபிஎஸ்

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் – ஓபிஎஸ்

மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தார்.

இதன்பின் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும், மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டால் சம்மந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தவறிழைக்காத மருத்துவ கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியமற்ற செயல். கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்த தவறும் செய்யவில்லை. மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காததே சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எனவே, உடனடியாக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீண்டும் கல்லூரி முதல்வராக ஏ.ரத்தினவேலை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube