கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் தலைமையோ அவர்களிடம் கேளுங்கள் – பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் தலைமையோ அவர்களிடம் கேளுங்கள் – பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து தலைமை தாங்கும் அதிமுகவை தான் கேட்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ (அதிமுக) அவர்களிடம் கேளுங்கள் என்றும் அதிமுக தலைமைதான் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை, எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் நிச்சயமாக செயற்குழு, பொதுக்குழுவு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல முடிவை கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், வெளிப்படையாக பல்வேறு முறை எங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று அழைப்பை விடுத்துள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை அதுகுறித்து எந்தவிதமான தெளிவான பதிலும் இல்லை மவுனம் மட்டுமே நீடித்து வருகிறது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப் 14-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை, அதிமுக கூட்டணியில் இருக்கும் நீங்கள் சந்திக்க வாய்ப்பு இருக்கா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறிய பிரேமலதா விஜயகாந்த், பிரதமர் தமிழகத்தில் 3 மணிநேரம் மட்டும் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பிரதமரை வரவேற்பதற்கான அழைப்போ அல்லது சந்திப்பதற்கான அழைப்போ அவர்கள் தரப்பில் இருந்து வந்தால், நாங்கள் கட்டாயம் பிரதமரை சந்திப்போம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube