ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஷீத் கான்!

டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரஷித் கான் அணியில் இரண்டு மாற்று வீரர்கள் உள்ளிட்ட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே, ரஷித் கான் ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கேப்டன் என்ற முறையில் தேர்வுக்குழுவினர், தன்னிடம் ஆலோசிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கேப்டனாகவும், பொறுப்பான நபராகவும் இருக்கும் போது அணியின் தேர்வின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு உரிமை உண்டு எனவும் கூறினார்.

தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்காக எப்போதும் விளையாடுவது எனது பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரஷித் கான் கேப்டன் பதிவில் இருந்து விலகிய நிலையில், முகமது நபி உலகக் கோப்பைக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 அணி: ரஷீத் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய், உஸ்மான் கானி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, முகமது ஷாசாத், முஜீப் உர் ரஹ்மான், கரீம் ஜனத், குல்பதீன் நாயப், நவீன் உல் ஹக், ஹமீத் அஸ்ஃபான் தவ்லத் ஜத்ரன், ஷபூர் ஜத்ரான், கைஸ் அகமது

மாற்று வீரர்கள்: அப்சர் ஜசாய், ஃபரித் அகமது மாலிக்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்