குடியரசு தினத்தன்று டிராக்டர்களில் பேரணி – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில்,இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும்  தோல்வியில் தான் முடிந்தது.

இதற்கு முன்பாக மத்திய  அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது .விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் , மன், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தன்பாத்  ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் குழுவில் அமைக்கப்பட்டவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்றும் இந்த குழுவை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள்,ஜனவரி 26-ஆம்  தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆகவே உச்சநீதிமன்றத்தில் இந்த டிராக்டர் பேரணிக்கு எதிராகவும் டெல்லி போலீசார் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே  உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை நீக்க கோரும் மனு மீதான  விசாரணையும் இன்றும் நடைபெற உள்ளது.