தொடர் அமளி ! மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமடைந்து,எதிர்க்கட்சிகள்  கடும் அமளில் ஈடுபட்டனர்.எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.-க்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினர். இந்த அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் துணை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுக்க கடிதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அமளில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில்  மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டம் தொடர்பாக  மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்   அமளி காரணமாகவும்  ,இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்ததாலும் நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.