வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்… சபாநாயகர் மீது புத்தகத்தை வீசி எறிந்ததால் பரபரப்பு…

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இரண்டு  வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டன. கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை கிழித்து எறிந்து, அவைத் தலைவர் மீது விதி புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கொரோனா பாதிப்புக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டன. மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியதை துணைத்தலைவர் நிராகரித்தார்.

இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். டெரிக் ஓ பிரைன் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினார். துணைத் தலைவரின் மேசையில் இருந்த பொருட்களை தட்டி விட்ட எம்பி.க்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இந்த அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதோடு, அவையை இன்று காலை 9 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஸ் தெரிவித்தார். ‘இது நாடாளுமன்றத்தின் கருப்பு நாள்.’ என முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்றத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

author avatar
Kaliraj