ஜனநாயக போரில் நமது படையும் போட்டியிடும் !ரஜினிகாந்த்…..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உள்ளே சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியிலும் பல ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு புறப்பட்ட ரஜினிகாந்தை கண்ட செய்தியாளர்கள், அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தனது வழக்கமான ஸ்டைலுடன் 10 நிமிடம் பொறுத்திரு கண்ணா என்று கூறிவிட்டுச் சென்றார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, உற்சாகமாக காணப்பட்டனர். இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய உற்சாக ஆரவாரம் அடங்க வெகு நேரம் தேவைப்பட்டது.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் செயல் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வோம் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், அதில் போட்டியிடப் போவதில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அந்த நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருக்கோ, புகழுக்கோ, பணத்துக்கோ தாம் அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். 1996ம் ஆண்டே தன்னை தேடி பதவி வந்ததாகவும் அப்போதே தான் நிராகரித்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் கட்சிகள், சொந்த மக்களையே கொள்ளையடிப்பதாக ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் கெட்டு, ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். கடந்த ஓராண்டு கால அரசியல் நிகழ்வுகளால் இந்திய அளவில் தமிழக மக்கள் தலைகுனிவை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை, நேர்மையுடன் ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும் என்றும், அதுவரை அரசியல் பேச வேண்டாம் என்றும், மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என்றுங்ம ரஜினிகாந்த் ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

அரசியல் கட்சி தொடங்கும் முன்னர், தமிழகம் முழுவதும் இருக்கும் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பதே முக்கிய பணி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அனைத்து தரப்பினரையும் தனது மன்றத்தில் இணைக்க வேண்டும் என்றும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது உரையை முடித்த பின்னர், ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே ரசிகர்கள் குவிந்திருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து மண்டபத்துக்கு வெளியே வந்த ரஜினிகாந்த், பால்கனியில் நின்றவாறு, ரசிகர்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் போயஸ் கார்டனில் பேசிய ரஜினி, ஆன்மிக அரசியல் என்றால் தர்மமான, நியாயமான அரசியல் என்று விளக்கம் அளித்தார்.

source: dinasuvadu.com

Leave a Comment