200 நாட்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு செலுத்த வேண்டும் – ராகுல் காந்தி

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 200 நாட்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் – ராகுல் காந்தி 

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இறுதியாக நேற்று விவசாயம், மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளுக்கு 8 முக்கிய திட்டங்களை அறிவித்தார். 

இதுகுறித்து காணொளிக்காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நேரடியாக பணம் நிவாரணமாக தாருங்கள். கடன் என்பது நிவாரணம் அல்ல, பணத்தை நேரடியாக கொடுப்பது தற்போதைய தீர்வு ஆகும். நாட்டு மக்களுக்கு தற்போது பணம் தான் தேவை. இதனால் அவர்களுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி மாற்ற வேண்டும். ஏழைகள், விவசாயிகள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு 200 நாட்களுக்காக ஊதியத்தை மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்