40 சதவீத கமிஷன் குறித்து பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என ராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி, தன்னை பற்றி பேசுவதை தவிர்த்து மக்கள் பிரச்சனைகள், மக்கள் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநிலத்திற்கு என்ன செய்துள்ளார் என்பதை குறித்து பேச வேண்டும் என ராகுல்காந்தி பேசினார்.
மேலும் பேசிய ராகுல்காந்தி, கர்நாடகாவில் பாஜக ஊழல் செய்தது. அதனால், மக்கள் பாஜகவை ’40 சதவீத கமிஷன் அரசு’ என்று முத்திரை குத்தினார்கள். குழந்தைகள் கூட இதை ’40 சதவீத அரசு’ என்று அழைக்கிறார்கள். பிரதமருக்கு எல்லாம் தெரியும். ஒப்பந்ததாரர்கள் சங்கத்திடம் இருந்து புகார்கள் எழுந்தன. அந்த புகார் குறித்து பிரதமர் மோடி என்ன செய்தார்? அவர் கர்நாடகா வந்ததும் மக்களுக்கு அதனை சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ‘பிரதமர் இங்கு வந்து இந்த மோசடிகள் பற்றி பேசுவதில்லை. ஒரு குழந்தைக்கு இங்கு ஊழல் தெரியும் என்றால், பிரதமருக்கு எப்படி தெரியாமல் போகும்.? இங்கு ஊழலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். எத்தனை பேரை பதவி நீக்கம் செய்தீர்கள்? காங்கிரஸ் என்னைத் தாக்குகிறது என்று மட்டும் சொல்கிறீர்கள். ஆட்சியை திருடிய நீங்கள் கடந்த மூன்றாண்டுகளில் கர்நாடகாவுக்கு என்ன செய்தீர்கள் என்பதை மக்களிடம் சொல்லுங்கள். இங்கு கேள்வி மோடி பற்றியது அல்ல, மக்களின் எதிர்காலம் பற்றியது என ராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.