தோல்வியை நெருங்கவிடாமல் கேப்டனாக தொடரும் ரஹானே..!

டெஸ்ட் போட்டியில் தோல்வியை காணாத கேப்டனாக ரகானே தொடர்ந்து வருகிறார்.

இந்தியா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 25-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்தியா 49 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

இந்தியா 7 விக்கெட் இழந்து 234 ரன்கள் அடித்த நிலையில் 283 ரன்கள் முன்னிலை பெற்று 284 ரன் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. நேற்றைய 4-ஆம் ஆட்டத்தின் கடைசி 4 ஓவர் இருந்தபோது தனது 2-வது இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது.  இதைத்தொடர்ந்து, கடைசி நாளான இன்று நியூசிலாந்து போட்டியை டிரா செய்வதற்கான அணுகுமுறை கையாண்டனர். இதன் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் ரன் அடிப்பதில் கவனத்தை செலுத்தாமல் விக்கெட்டை இழக்காமல் நேரத்தை கடத்தி வந்தனர்.

5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணியில் அஸ்வின் 3, ஜடேஜா 4 விக்கெட்டை பறித்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கேப்டனாக ரஹானே அணியை வழி நடத்தினார். இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் தோல்வியை காணாத கேப்டனாக ரகானே தொடர்ந்து வருகிறார்.

ரகானே இதுவரை 6 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் டிரா செய்துள்ளார். அதேபோல 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று அதிலும் தோல்வியை சந்திக்கவில்லை.

author avatar
murugan