கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி – மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம்!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாமும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட கல்வா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியும் ரேபிஸ் தடுப்பூசியும் வெவ்வேறு பகுதிகளில் செலுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த சுகாதார மையத்திற்கு சென்ற ராஜ்குமார் என்ற நபர் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு கூறிய பொழுது, அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ராயத்  ஆகிய இருவரும் அவருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனால் தடுப்பூசி செலுத்திய பின்பு மருந்து பாட்டிலை கவனித்த போது அது ரேபிஸ் வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றிருந்த ராஜ்குமார் தானே நகராட்சியில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ராயத் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal