#QuadSummit:”கொரோனாவின் சவாலான சூழ்நிலை” – பிரதமர் மோடி உரை!

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது,கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”முதலில்,நான் (ஆஸ்திரேலிய) பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பதவியேற்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் எங்களிடையே இருப்பது குவாட் நட்பின் வலிமையையும் அதற்கான உங்கள் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

மேலும்,குவாட் மிகக் குறுகிய காலத்தில் உலகின் முன் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இன்று,குவாட்-இன் நோக்கம் விரிவானதாகிவிட்டது,அதன் வடிவம் பயனுள்ளதாக உள்ளது.பரஸ்பர நம்பிக்கையும்,உறுதியும் ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கிறது”,என்று கூறினார்.

மேலும்,பேசிய பிரதமர் மோடி:”கொரோனாவின் சவாலான சூழ்நிலை உலகெங்கிலும் இருந்தபோதிலும்,இந்தியா தடுப்பூசிகளை கொடுத்து சக நாடுகளுக்கு உதவியது,”,என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி அவர்கள்,அமெரிக்க அதிபர் மற்றும் ஆஸ்திரேலிய புதிய பிரதமருடன் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக,இந்தொ-பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா,அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ஆம் ஆண்டு குவாட் என்ற அமைப்பை உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment