நீக்கப்பட்டது கொரோனா வரி, குறைந்தது மதுபான விலை.. குஷியில் மதுப்பிரியர்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களுக்கு கொரோனா வரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் மதுபானங்களின் விலை குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி மே 24-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து மதுபானங்கள் வாங்க யாரும் புதுச்சேரிக்குள் வராமல் இருக்க மதுபானங்களுக்கு சிறப்பு கலால் வரியில் 25% கூடுதல் வரியை விதித்து, அதை மார்ச் 31, 2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று முதல் மதுபானங்கள் மீதான சிறப்பு கலால் வரியை வசூலிக்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறப்பு கலால் வரியின் செல்லுபடியை அகற்ற கலால் துறை சமர்ப்பித்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளேன். இதனால் மதுபானங்கள் மீதான சிறப்பு கலால் வரி விதிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த குறைந்தபட்ச விலை மறுபடியும் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பை அறிந்த மதுபிரியர்கள், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.