#Breaking: “புதுச்சேரியில் 81.70 சதவீத வாக்குகள் பதிவு”- தேர்தல் ஆணையம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், அம்மாநிலத்தில் நேற்று மாலை 7 மணி வரை 81.70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அந்தவகையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நேற்று நடந்து முடிந்தது.

தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் புதன்கிழமை காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நேற்று மாலை 7 மணி வரை 81.70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ராஜ் பவனில் 72.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 10,04,197 வாக்காளர்களின் 8,20,447 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் 8,331 பேர் தபால் வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.