உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் ஆத்திரம்.. எம்.எல்.ஏ. மீது காலணியை வீசி ஆவேசம்!

தெலுங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. மீது அப்பகுதி மக்கள் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள எம்.எல்.ஏ. மன்சிரெட்டி, அப்பகுதிக்கு சென்றார்.

அப்போது மடிப்பள்ளி என்ற இடத்தில் அவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு, வெள்ள நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், எம்.எல்.ஏ. மன்சிரெட்டி மீது காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும், அவரின் வாகனத்தையும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதனை கண்டுகொள்ளாத பொதுமக்கள், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதுத்தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.