ஊக்கத்தொகையும், 2 மாத ஊதிய நிலுவை தொகையும் வழங்குக – ஓபிஎஸ் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையும், 2 மாத ஊதிய நிலுவை தொகையும் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவர்கள் என்பதையும், கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் அம்மா மினி கிளினிக்குகளில் தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

கொரோனா இரண்டாவது அலையின்போது, மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து சுகாதர  நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டதாகவும், பெரும்பாலானோருக்கு இந்தத் தொகை வழங்கப்படவில்லை என்றும், ஆனால் சிலருக்கு 7,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் தான் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வருகின்றன.

முதலில் அம்மா மிளி கிளிளிக்குகளில் மருத்துவராக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படவில்லை என்றும், கொரோனா உறுதி செய்யப்பட்ட மருத்துவர்கள் தங்கும் இடம் இல்லாமல் அவதிப்படுவதாகவும்,  சில மருத்துவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் நாட்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

இருப்பினும், ஊக்கத் தொகை அளிப்பது குறித்தும், இரண்டு மாத ஊதியம் வழங்கப்படாதது குறித்தும் தெளிவான பதில் இல்லை. மே அல்லது ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்தாலும் அவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குவதுதான் நியாயமான ஒன்றாகும். ஏனெனில் அவர்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்துத்தான் கொரோனா இரண்டாவது அலையிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று, சில தற்காலிக மருத்துவர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் அளிக்கப்படவில்லை என்பதும், தங்கும் வசதி செய்து தரப்படவில்லை என்பதும் நியாயமான கோரிக்கைகள் தான்.

எனவே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கவும், இரண்டு மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவும் மற்றும் தங்கும் வசதி செய்து தரவும் தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்