தமிழ் தலைவாஸ்! பெங்களூரை இன்று வீழ்த்துமா? #ProKabaddi

0
173
தமிழ் தலைவாஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இரண்டு போட்டியிலும் வெற்றிக்காக போராடி கடைசி நேரத்தில் தோற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாகப் போராடியது. எனினும் பெங்களூரு அணியின் புத்திசாலித்தனமான ஆட்டத்தால் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், இன்றைய தினம் நாக்பூர் மான்கபூர் உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் போட்டியில் இரவு ஒன்பது மணி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மல்லுக்கட்ட உள்ளனர். பெங்களூரு அணிக்கு இது ஏழாவது போட்டியாகும். ரோகித் தலைமையிலான அணி இந்த லீக் தொடரில் இதுவரை அருமையாக ஆடி வருகிறது. குறிப்பாக ரெய்டுகளில் கலக்குகிறது. ஆஷிஷ் குமார், மகேந்திர சிங் ஆகியோர் பெங்களூரு அணிக்கு மேட்ச் வின்னர்களாக திகழ்கின்றனர்.
தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் இன்னும் முழு ஃபார்முக்கு திரும்பவில்லை. அவரது ரெய்டுகளில்தான் அணியின் வெற்றி இருக்கிறது. தமிழக வீரர் பிரபஞ்சன் சிறப்பாக ரெய்டு சென்று புள்ளிகளை வென்று வருகிறார். எனினும் அவர் மேட்ச் வின்னிங் பெர்பார்மென்ஸ் காட்டுவது அவசியம். டாங் ஜியோன் லீ தமிழ் தலைவாஸுக்கு நிச்சயம் துருப்புச் சீட்டாக இருப்பார். இன்னொரு தமிழக வீரர் அருண் நிலையற்ற ஃபார்மில் இருக்கிறார். அவர் முதல் பாதி சொதப்பினால் இரண்டாவது பாதி நன்றாக ஆடுகிறார். ஒரு போட்டியில் நாற்பது நிமிடமும் கவனம் செலுத்தி ஆரம்பத்தில் இருந்தே எதிரணி வீரர்களை வீழ்த்தினால் தமிழ் தலைவாஸ் விறுவிறுவென முன்னேறலாம். பெங்களூரு இப்போதைக்கு தமிழ் தலைவாஸ் அணியை விட வலுவான அணியாகவே விளங்குகிறது. எனினும் இந்தப் போட்டியில் அந்த அணியின் அதிர்ச்சிகரமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here