31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான்

செப்டம்பர் மாதம் முதல் 2000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய ஒன்றிய அரசின் அறிவிப்பு நாட்டு மக்களை முட்டாளாக்கும் செயல் என சீமான் அறிக்கை.

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய ஒன்றிய அரசின் அறிவிப்பு நாட்டு மக்களை முட்டாளாக்கும் கொடுங்கோன்மைச் செயலாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் தான்தோன்றித்தனமான செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.

கறுப்புப் பணத்தை முழுவதுமாக ஒழிக்கப்போகிறேன் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாளன்று இரவோடு இரவாக ஐந்நூறு ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தார் இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள கறுப்புப் பணம், இலஞ்சம், தீவிரவாதச் செயல்கள் என அனைத்தும் ஒழிந்து 50 நாட்களுக்குள் நாடே சொர்க்கமாகிவிடும் என்று கூறியதுடன், இல்லையென்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றும் சவால் விட்டார். ஆனால் இறந்து பலபேர் சொர்க்கம் சென்றார்களே ஒழிய அதனால் ஒரு நன்மையும் ஏற்படாததுடன் கடும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடிப்படை இலக்காக இருந்த கறுப்பு பண ஒழிப்பு என்பது இன்றுவரை இந்தியாவில் சாத்தியப்படவில்லை. மாறாக மோடி அரசு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வாயிலாக கறுப்பு பணப்புழக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. முன்னேற்பாடுகள் எதுவுமின்றி ஒரே இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களிடையே ஏற்பட்ட பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றால்பாதிக்கப்பட்டும், வங்கி வாசல்களில் காத்திருந்தும் பலியான பல்லாயிரக்கணக்கான குடிமக்களுக்கு பாஜக அரசு என்ன நீதி வழங்கப்போகிறது?

தவறான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்கள் தொழிலைத் தொலைத்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கும், வேலை இழந்த கோடிக்கணக்கான மக்களுக்கும் மோடி அரசு கூறப்போகும் பதில் என்ன? தற்போதைய பொருளாதாரச் சீரழிவிற்கு பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரி விதிப்பும்தான் காரணம் என்ற உலக வங்கியின் குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி என்ன பதில் கூறப்போகிறார்?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தவுடன் அதனை வரவேற்று, புதிய இந்தியா பிறந்து விட்டதாக மோடியைப் புகழ்ந்து பேசிய அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள் இப்போது வாய்திறந்து பேசுவார்களா? 2000 ரூபாய் தாள்களால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை எனில் ஏன் அதனை வெளியிட வேண்டும்? இப்போது ஏன் அதனைத் திரும்பப்பெற வேண்டும்? அதனை அச்சடிப்பதற்காகச் செலவிடப்பட்ட தொகையை யார் கொடுப்பது? தற்போது மீண்டும் 2000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளை நோக்கி மக்கள் அலையவிட்டு அவர்களின் உழைப்பு மற்றும் நேரத்தினை வீணடிப்பதால் ஏற்படும் நட்டத்தை யார் ஈடுகட்டுவது? என்ற கேள்விகளுக்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு என்ன பதில் கூறப்போகிறது.

ஆகவே, பண மதிப்பிழப்பு என்ற தவறான பொருளாதார நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தை அதளப் பாதாளத்திற்குள் தள்ளி, ஏழை மக்கள் தலையில் தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ளதுடன், தற்போது மீண்டும் 2000 ரூபாய் தாள்களை செல்லாது என்று அறிவித்துப் பெருங்கொடுமை புரிந்துள்ளதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நாம் தமிழர் சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.