ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக பங்கேற்கிறார்!

  • இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 வரை ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று மற்றும் நாளை பங்கேற்கிறார்

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்தில் நடைபெறக்கூடிய ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், கொரோனா பரவல் குறையாததால் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த மாநாட்டில் 12 மற்றும் 13 ஆகிய இரு அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்பார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஜி-7 மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். இதில் உடல்நிலை மற்றும் காலநிலை மாற்றத்தை மையமாகக்கொண்டு கொரோனா தொற்றுக்கு மத்தியில் எப்படி உலகை முன் நோக்கி நகர்த்துவது என்பது குறித்த கருத்துகளை தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal