மைதானத்தில் இஷாந்த் சர்மாக்கு பரிசு வழங்கிய குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது 100-வது டெஸ்ட் போட்டியினை விளையாடி வரும் நிலையில், அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நினைவுப்பரிசினை வழங்கினார்கள்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. தற்பொழுது இந்திய அணி, தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த போட்டியை காண குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர். இந்த போட்டி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்காரணமாக போட்டி தொடங்குவதற்கு முன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா இஷாந்த் சர்மாக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.