தொடங்கியது premier league கால்பந்து தொடர்…!

உலகின் மிகவும் பிரசித்திபெற்ற கால்பந்து தொடரான ப்ரீமியர் லீகின் (Premier league) புதிய சீஸன், சனிக்கிழமை தொடங்கியது. அனைத்து அணிகளும் பல புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன. குறிப்பாக, முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் போன்ற அணிகள் எல்லாம் பல மில்லியன் டாலர்களைச் செலவுசெய்து பல வீரர்களை வாங்கியதால், இந்த முறை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. நடப்பு சாம்பியன் செல்சீ, ஆர்சனல், டாட்டன்ஹாம், லிவர்பூல், யுனைடெட் மற்றும் சிட்டி அணிகளுக்கிடையே போட்டி முன்பைவிட பல மடங்கு தீவிரமாக இருக்குமென்று அனைவரும் கணித்திருந்தனர். ஆனால், சில அதிர்ச்சி ஆச்சர்யங்களுடன்தான் தொடர் தொடங்கியுள்ளது.

5 நிமிடம் – 2 கோல்கள்: அபார தொடக்கம்!

எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த சீஸனின் முதல் போட்டியில் ஆர்சனல் மற்றும் லெய்செஸ்டர் அணிகள் மோதின. இரண்டாவது நிமிடத்திலேயே ஆர்சனல் வீரர் லாகசாட் கோல் அடித்து அசத்தினார். தனது முதல் ப்ரீமியர் லீக் போட்டியிலேயே, அதுவும் வெறும் இரண்டு நிமிடத்திலேயே அவர் கோலடித்தது, அவரை ஆர்சனல் ரசிகர்களுக்கிடையே ஹீரோவாக்கியது. ஆனால், முன்னாள் சாம்பியன் லெய்செஸ்டர் அணி ஐந்தாவது நிமிடத்திலேயே பதிலடி கொடுத்து, அந்த அணியின் ஓகசாகி பந்தை தலையால் முட்டி ஆட்டத்தை சமனாக்கினார். இப்படி ஐந்து நிமிடத்தில் இரண்டு கோல்களோடு தொடங்கியது ப்ரீமியர் லீக் தொடர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சனல் அணி, பின் களத்தில் சொதப்பியது. இதனால் ஒரு கட்டத்தில் 3-2 எனப் பின்தங்கவேண்டியதாயிற்று. கடைசி 7 நிமிடத்தில் ராம்சேயும், ஜிரௌடும் ஆளுக்கொரு கோல் அடிக்கப் போராடி, 4-3 என வென்றது ஆர்சனல் அணி. அந்த அணியின் வெல்பெக்கும் தன் பங்குக்கு முதல் பாதியில் கோல் அடித்திருந்தார். லெய்செஸ்டர் வீரர் வார்டி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

ஆர்சனலைப்போலவே லிவர்பூல் அணியும் கத்துக்குட்டி வாட்ஃபோர்டு அணியிடம் தடுமாறியது லிவர்பூல். அவர்களும் பின் களத்தில் படுமோசமாகச் செயல்பட்டனர். 3-2 என வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அந்த அணி, கடைசிக்கட்டத்தில் மீண்டும் சொதப்ப 94-வது நிமிடத்தில் கோல் வாங்கியது. இதன்மூலம் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. லிவர்பூல் அணிக்காக முதல் ப்ரீமியர் லீக் போட்டியில் விளையாடிய முகமது சஹா, தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து அசத்தினார்.
சிவப்பு அட்டையால் சிதைந்த சாம்பியன்

கடந்த சீஸனில் 30 வெற்றிகள் பெற்று சாம்பியன் ஆனது, செல்சீ அணி. இந்த முறை அந்த அணியின் வீரர்கள் பலரும் பிற அணிகளுக்கு விற்கப்பட்டனர். சில முன்னணி வீரர்கள், காயத்தாலும் சஸ்பென்ஷனாலும் பங்கேற்க முடியாத நிலையில் மிகவும் பலம் குன்றிய வீரர்களாகவே சிறிய அணியான பர்ன்லியுடன் களமிறங்கியது செல்சீ அணி. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான ஜான் டெர்ரியின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால், கேப்டன் பதவி வழங்கப்பட்ட கேரி காஹில், அந்த அணிக்குப் பெரும் சிக்கலைத் தேடித்தந்தார். மோசமான பெளலின் காரணமாக 14-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் காஹில். அதன் பிறகு செல்சீ அணி நிலைகுலைந்துபோனது. வீரர்கள் அனைவரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். அதைப் பயன்படுத்திக்கொண்ட பர்ன்லி அணி, முதல் பாதியிலேயே மூன்று கோல்கள் அடித்து, சாம்பியனுக்கு மேலும் மேலும் பிரச்னையை உண்டாக்கியது.

இரண்டாம் பாதியில் அந்த அணியின் காஸ்ட்லி வீரர் மொராடா முதல்முறையாக ப்ரீமியர் லீகில் களம் கண்டார். 10 நபர்களுடன் ஆடிய செல்சீ அணி, இரண்டாம் பாதியில் உத்வேகத்துடன் ஆடியது. அதன் பலனாக 69-வது நிமிடத்தில் வில்லியனின் கிராசை மொராடா கோலாக்க, செல்சீ ஆணி மீண்டுவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் ஏற்கெனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்த ஃபேப்ரகாஸ் மீண்டும் மஞ்சள் அட்டையைப் பெற்று வெளியேறினார். கடைசி 10 நிமிடத்தில் ஒன்பது வீரர்களுடன் மல்லுக்கட்டியது அந்த அணி. கடைசிக்கட்டத்தில் டேவிட் லூயிஸ் கோலடித்தபோதும் தோல்வியை அவர்களால் தடுக்க முடியவில்லை. நடப்பு சாம்பியனின் இந்த எதிர்பாராத தோல்வி, ப்ரீமியர் லீக் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கம் பேக்கில் நாயகனான ரூனி!
மற்றொரு முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி, இந்த முறை ப்ரீமியர் லீக்குக்குப் புரொமோட் ஆன பிரிட்டன் & ஹோவ் ஆல்பியான் அணியை எதிர்கொண்டது. மற்ற முன்னணி அணிகளைப்போலவே சிட்டி அணியாலும் தங்களின் முழு திறனையும் வெளிக்கொண்டு வர முடியவில்லை. ஏராளமான தாக்குதல் வீரர்களைக்கொண்ட அந்த அணியால், 70 நிமிடம் வரை கோல் அடிக்கவே முடியவில்லை. ஆனாலும், தங்கள் போராட்டத்தின் பயனாக அடுத்த ஐந்து நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்து 2-0 என அந்த அணி வாகை சூடியது.
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் வெய்ன் ரூனி, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவான். எவர்டன் அணியிலிருந்து தனது 19-வது வயதில் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தமானார். 13 வருடங்கள் அந்த அணியில் விளையாடிய அவர், ஃபார்மை இழந்துவிட, மீண்டும் எவர்டன் அணிக்கே திரும்பினார். எவர்டன் அணியிலும் அவருக்கு இடம் கிடைக்குமா என நிபுணர்கள் சந்தேகிக்க, தனது எவர்டன் கம்பேக்கின் முதல் போட்டியிலேயே கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார் ரூனி. ஸ்டோக் அணியுடனான அந்தப் போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும் கோல் அடிக்கவில்லை. அது, ப்ரீமியர் லீக் தொடரில் ரூனியின் 199-வது கோலாக அமைந்தது.
கடந்த முறை இரண்டாம் இடம் பிடித்த டாட்டன்ஹாம் அணி, இந்த முறை புரொமோட் ஆன நியூகாஸ்டில் அணியை எதிர்கொண்டது.
கடந்த ப்ரீமியர் லீக் சீஸனில் அதிக கோல் அடித்திருந்த அணியான டாட்டன்ஹாமால், முதல் பாதியில் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. கடந்த முறை ‘கோல்டன் பூட்’ விருது வென்ற ஹேரி கேனாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் நியூகாஸ்டில் வீரர் ஷெல்விக்கு யாரும் எதிர்பாரா வகையில் சிவப்பு அட்டை காண்பித்தார் நடுவர். அதன் பிறகு 10 வீரர்களுடன் விளையாடிய அந்த அணியை 2-0 என டாட்டன்ஹாம் அணி வென்றது. ஆனால், அதற்கு முன்பு அந்த அணியின் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த அணிக்கு டெலே அல்லியும் டேவிஸும் கோலடித்தனர்.
உரக்க ஒலித்த யுனைடட் குரல்
முன்னணி அணிகள் எல்லாம் சுமாராகவே செயல்பட, மான்செஸ்டர் யுனைடெட் அணி மட்டும் பட்டையைக் கிளப்பியது. வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை, தன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட அந்த அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. மற்ற அணிகளுக்காக முதல் போட்டியில் பலரும் கோல் அடித்ததைப்போலவே அந்த அணியின் சார்பில் லுகாகுவும் இரண்டு கோல்கள் அடித்தார். மேலும் மார்சியல், போக்பா ஆகியோரும் கோல் அடிக்க யுனைடெட் அணி 4-0 என வெற்றி கண்டது. கடந்த சீஸனைப்போல் இல்லாமல், அந்த அணியின் ஆட்டம் மிகவும் திடமாக இருந்தது. முன் களத்தில் லுகாகுவும் ரேஷ்ஃபோர்டும் அபாரமாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். அதேபோல் நடுகளத்தில் போக்பாவும் மேடிச்சும் ஆதிக்கம் செலுத்தினர். அதனால் வெஸ்ட் ஹாம் அணிக்கு கோலடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. இதன்மூலம் முதல் வாரம் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
ஷாக் தந்த ஹட்டர்ஸ்ஃபீல்டு
புதுமுக அணியான ஹட்டர்ஸ்ஃபீல்டு அணி, கிறிஸ்டல் பேலஸ் அணியை 3-0 என வீழ்த்தி, அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் வாரத்தில் முன்னணி அணிகள் எல்லாம் தடுமாறிய நிலையில், அந்த அணியின் செயல்பாடு மிகவும் அபாரம். மற்ற போட்டிகளில், வெஸ்ட் புரோம் அணி 1-0 என போர்ன்மவுத் அணியை வீழ்த்தியது. ஸ்வான்சி, சவுதாம்ப்டன் அணிகள் மோதிய ஆட்டம் கோல் ஏதும் அடிக்கப்படாமல் டிராவானது. முதல் வாரத்திலேயே மூன்று வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வோக்ஸ், மௌனி, லுகாகு, வார்டி ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர்.
ப்ரீமியர் லீகின் முதல் வாரம், சில ஆச்சர்யங்களுடனும் சில அதிர்ச்சிகளுடனும்தான் தொடங்கியிருக்கிறது. நட்சத்திர வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது நடப்பு சாம்பியன் செல்சீக்குப் பெரும் பின்னடைவு. இந்த முதல் வாரம் ப்ரீமியர் லீக் ரசிகர்களுக்கு உரக்கச் சொல்வது இதுதான், `மூன்று வருடங்களுக்குப் பிறகு ப்ரீமியர் லீக் கோப்பை மான்செஸ்டர் நகருக்கு வரப்போகிறது. அதை வெல்வது மான்செஸ்டர் சிட்டியாகவும் இருக்கலாம் அல்லது யுனைடெடாகவும் இருக்கலாம்.’
பொருத்திருப்போம் இன்னும் 37 வாரங்கள். அதுவரை கால்பந்தின் ஜீவனை, கண்களால் காதலிப்போம்!
author avatar
Castro Murugan

Leave a Comment