முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்..!

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.  பிரசாந்த் கிஷோர் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில்,  பொது வாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தகட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார். சமீபத்தில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார். இந்த தேர்தலில் இரு கட்சிகளும் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகுவதாகவும், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்தார். இதனால், 2024 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

author avatar
murugan