“இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பிரணாப் முகர்ஜி”- கே.எஸ்.அழகிரி இரங்கல்!

முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜீ மறைவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அவரின் மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் இரங்கல் செய்தியை தெரிவித்தார். அதில், நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரிய பின்னணி கொண்ட பிரணாப் முகர்ஜி அவர்கள் குடியரசு தலைவராக மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு, ஓய்வு பெற்ற பின், உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என தெரிவித்தார்.

மேலும், 1969- ல் காங்கிரஸ் பிளவுபட்ட போது, அன்னை இந்திராவிற்கு உற்ற துணையாக அரசியல் பிரவேசம் செய்தவர் எனவும், மத்திய அரசில் அவர் வகிக்காத பதவிகளே இல்லையென்று கூறுகிற வகையில், பாதுகாப்பு அமைச்சராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, வர்த்தக அமைச்சராக, நிதி அமைச்சராக மற்றும் திட்டக்குழு தலைவராக பொறுப்பு வகித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.