#Breaking: மதுரையில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு.. மக்கள் அதிருப்தி!

மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் அங்கு  வாக்குப்பதிவு துவங்க தாமதமானது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கும் முன், வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்கு முகவர், பணியாளர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்பொழுது மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சலசலப்புக்கு உள்ளானார்கள். போலீசார் சமாதானம் செய்தபின் அவர்கள் அமைதியாக்கினார்கள். அதன்பின் சரியாக 7.45 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டது. மேலும், அந்த வாக்குச்சாவடி மையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனவும் பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர்.