உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

உலகளாவிய படிதார் வர்த்தக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) உலகப் படிதார் வணிக உச்சி மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.குஜராத்தில் உள்ள எண்ணிக்கையில் அதிகமான படிதார்களின் அமைப்பான சர்தார்தம் சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை வழங்குவதற்காக “மிஷன் 2026” இன் கீழ் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுவதாக,பிரதமர் அலுவலகம் ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி,இதற்கு முன்னதாக 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முதல் இரண்டு உச்சி மாநாடுகள் சூரத்தில் நடைபெற்றது.இந்த நிலையில், தற்போது நடைபெறும் குளோபல் படிதார் வணிக உச்சிமாநாடு 2022 இன் முக்கிய கருப்பொருள் ‘ஆத்மநிர்பர் சமூகம் ஆத்மநிர்பர் குஜராத் மற்றும் இந்தியா’ என்பதாகும்.

அதாவது,இந்த மாநாடு சமூகத்திற்குள் சிறிய,நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும்,புதிய தொழில்முனைவோரை வளர்த்து ஆதரிப்பது மற்றும் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டுள்ளது.

மேலும்,இன்று முதல் மே 1 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் உச்சி மாநாடு,அரசாங்க தொழில் கொள்கைகள், MSMEகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.