பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..களத்தில் தேஜஷ்வி -நிதிஷ்..விறுவிறு

பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..களத்தில் தேஜஷ்வி -நிதிஷ்..விறுவிறு

பீகாரில்  இன்று 2-ம் கட்ட   தேர்தல்  நடைபெறுகிறது.வாக்குபதிவு தற்போது தொடங்கியுள்ளது.

பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் நிலையில் மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி  பிரசாரத்தினை  கட்சிகள்  நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது.

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் தனிமனித இடைவெளியோடும், முக கவசம் அணிந்து வாக்களித்து வருகின்றனர்.

2ம் கட்ட தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு:- 

2ம்கட்ட தேர்தலானது 17 மாவட்டங்களை உள்ளடக்கிய  94 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

94 தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர்களும்  பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர்களும் அதில் திருநங்கையர் 980 பேரும் உள்ளனர்.

2ம்கட்ட தேர்தலுக்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்வேட்பாளர்கள் மற்றும் 146 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும்,தராலி
தனி தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் களத்தில் நிற்கின்றனர்.

இன்று நடைபெறும் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மற்றும் அவரது சகோதரர் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இவர்களுடன் முதல்வர் நிதிஷ்குமாரின் தனது சொந்த கிராமமான ஹரானட் தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube