ஆன்லைனில் மது விற்க அனுமதி – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு!

ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டுக்கே சென்று வினியோகிக்க டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அளவை கணக்கில் வைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எனவே, கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, மருந்தகங்கள் மற்றும் பால், மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் 50 சதவீதம் பேர் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மதுபான விற்பனைக்கு டெல்லியில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபானங்கள் கிடைக்காமல் மது பிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களை திருப்திபடுத்தும் விதமாக தற்போது டெல்லி அரசு ஆன்லைன் வழி மது விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மதுபானம் வாங்க விரும்புபவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய மொபைல் போனில் அதற்கான செயலி அல்லது இணையதளத்தை பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். இருப்பினும் எல்லா மதுபான கடைக்காரர்களும் இந்த விற்பனையில் ஈடுபட முடியாதாம். எல்-13 சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்தவர்களுக்கு விநியோகிக்க முடியும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Rebekal