கேரளாவில் ஜனவரி 5 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி – பினராயி விஜயன்

கேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் சுமார் 9 மாதங்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

கேரளாவில் ஜனவரி 5 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 5-ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தினால் 100 பேரும், வெளியே நிகழ்ச்சி நடத்தினால் 200 பேரும் பங்கேறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு நாடு முழுவதும் திரைக்கு வர உள்ள நிலையில், கேரளாவில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்குமாறு விஜய் ரசிகர் மன்றத்தினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்