“பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்ற பதிவு – ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதை அடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும்,முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.ஈரோடு காவல்நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்,இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து,இந்தப் புகார் தொடர்பாக ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில்,நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா அவர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக அவர் முதல்முறையாக ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண் 1-ல் இன்று ஆஜரானார். அதன்பின்னர்,வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹெச்.ராஜா அவர்களை வருகின்ற 21 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.