பெகாஸஸ் விவகாரம் : 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்…!

பெகாஸஸ் விவகாரத்தில், 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில், இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெகாசஸ் விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், பெகாஸஸ் விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினர் உளவு பார்க்கப்படுகின்றனர்.

மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூற தயங்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற  உளவு மென் பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.