மீண்டும் அமெரிக்காவுடனான உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புகிறது – பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியாவைப் போலவே அமெரிக்காவுடனும் உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி இந்தியாவுடனான உறவை சீராக்க மேற்கொண்ட முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை எனவும், ஆனால் கடந்த கால கட்டத்தில் இந்தியா போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்ததாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். மேலும் துரதிஷ்டவசமாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது ஏற்பட்ட உறவில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும், அதனை மீட்டெடுக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருப்பதைப் போலவே பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நாகரிகம் மற்றும் சமமான உறவை நாடுவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal