இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக் ஆகிய இருவருமே 14 மற்றும் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தனர். ஏனென்றால், ஓடிஐ நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை, முதல் முறையாக பாகிஸ்தான் அணியுடனும், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச களத்தில் களமிறங்கியுள்ள நேபால் அணி, முதல் இரண்டு (ரன் அவுட் உள்பட) விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
முதல் இரண்டு விக்கெட்டுகளை விட்ட பாகிஸ்தான் அணியை, கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன்களை குவித்தனர். இதில், முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்திருந்த நேரத்தில் ரன் அவுட்டாகி வெளியேற, மறுபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம், 72 பந்துகளில் தனது அரை சதம் அடித்து அசத்தினார்.
இவருக்கு ஜோடியாக களமிறங்கிய இப்திகார் அகமது ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வருகிறார். இதனிடையே, தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமின் அசத்தல் பேட்டிங்கால் 109 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது 19வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபால் அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31வது சர்வதேச சதம் அடித்தார். 19 ஒருநாள் சதங்கள், 9 டெஸ்ட் சதம், 3 டி20 சதங்கள் என 31வது சர்வதேச சதம் அடித்து அசத்தியுள்ளார்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த இப்திகார் அகமது தனது அரை சதத்தை கடந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி 43 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் பாபர் அசாம் (110) மற்றும் இப்திகார் அகமது (56) விளையாடி வருகின்றனர்.