பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஸ்பாட் பிக்ஸிங்’கில் சிக்கியதால் ஒரு ஆண்டு தடை!

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடைவிதித்து   உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு தடை பிறப்பிக்கப்படும் 3-வது கிரிக்கெட் வீரர் ஷாஜியாப் ஹசன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஷர்ஜீல் கான், காலித் லத்தீப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, கடந்த ஆண்டு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியில் முகம்மது ஷாஜியாப் ஹசன் கான் இடம் பெற்று இருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியில் முகம்மது ஷாஜியாப் ஹசன் கான் இடம்பெற்று விளையாடி வந்தார். அப்போது, இவர் ஸ்பாட் பிக்ஸிங்கில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முகம்மது ஷாஜியாப் ஹசன் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் விசாரணை செய்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். விசாரணை முடிந்தது.

இந்த வழக்கில் பாகிஸ்தான் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் இன்று முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு ஒரு ஆண்டு தடையும், ரூ.10 லட்சம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

இது குறித்து முகம்மது ஷாஜியாப் ஹசன் கானின் வழக்கறிஞர் காஷிப் ராஜ்வானா லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், ”முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு விதிக்கப்பட்ட தடை என்பது கடந்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். அந்தத் தடைக்காலம் வரும் மார்ச் 17-ம் தேதியோடு முடிந்துவிடும். அதன்பின் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர் தாபாசுல் ரிஸ்வி கூறுகையில், ”முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கான தடை முடிவுக்கு வந்தால், அவரால் சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாது, உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவது குறித்து வாரியம்தான் முடிவு எடுக்கும். ஆனால், இந்த தண்டனை மற்ற வீரர்களுக்கு உதாரணமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் முகம்மது இர்பான், முகம்மது நவாஸ் ஆகியோரும், நசீர் ஜாம்ஷெட் ஆகியோரும் குறுகிய காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment