பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து – தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

கடந்த ஆட்சியில் கொண்டுவந்த பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2014-15-ம் நிதியாண்டில் ‘பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம்’ என்ற புதிய முறையை கொண்டுவந்தனர். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் ரூபாயிலும், கோடி ரூபாய்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே டெண்டராக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது.

இதனால் ஒரு சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெற்றன. சிறிய ஒப்பந்ததாரர்கள் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண்பதாக தெரிவித்த அமைச்சர், கடந்த சட்டசபையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் வேலு ‘பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் காலங்களில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையால் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு தனி தனியாகவே டெண்டர் விடப்படும் என ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பணிக்கு ஒரு டெண்டர் என்றும் ஒரு ஒப்பந்ததாரர் என்ற முறை அமலுக்கு வருவதால் அதிகமானோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்