கிராம சபை கூட்டம் நடத்த முடியும் என்பதே எங்களது நிலைப்பாடு – அண்ணாமலை

ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் கிராமசபை கூட்டம் ரத்து தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த முடியும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரது மரண வாக்குமூல வீடியோவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.

தஞ்சை அருகே பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் வரும் 25-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்