சாதாரண பயனர்கள் புதிய விதிகளைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை..! – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிகளை பற்றி பயப்பட ஒன்றுமில்லை என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், இந்த புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளாத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றும்,அதுமட்டுமின்றி குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில்,பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம்,சமூக வலைதளங்கள் குறித்து மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்தன.

இந்நிலையில், வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.அந்த முறையீட்டில் புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு எதிரான செயல் மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இதுகுறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘தனியுரிமையை அரசு முழுமையாக அங்கீகரிக்கிறது, மதிக்கிறது. சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிகளை பற்றி பயப்பட ஒன்றுமில்லை. புதிய விதையின் நோக்கமே சில குற்றங்களை செய்ய வழிவகுக்கும் செய்திகளை யார் முதலில் பரப்பியது என்பதை கண்டறிவது தான்.

புதிய விதிகள் சமூக ஊடகங்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்க மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. கேள்வி கேட்கும் உரிமை உள்ளிட்ட விமர்சனங்களை அரசு வரவேற்கிறது. இந்த புதிய விதிகள் சாதாரண பயனர்கள் சமூக ஊடகங்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது.’ என கூறியுள்ளார்