அதிமுக மனுவை பரீசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு ..!

தேர்தல் ஆணையம் அதிமுக மனு மீது வரும் 29 ம் தேதிக்குள் பரீசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த காரணமும் இல்லை. சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக போய்விடும்.

மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு வேறு மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளை அல்லது மத்திய அரசு பணியாளர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் வாக்கு பெட்டிகளை வைக்கும் அறையை பாதுகாக்க மத்திய தொழிற் பாதுகாப்பு படையை அமர்த்த வேண்டும், சிசிடிவி கண்காணிப்பு வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் மனு மீது வரும் 29 ம் தேதிக்குள் பரீசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

author avatar
murugan