8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு – குலாம் நபி ஆசாத்

8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிக்கப்படும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இதனையடுத்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.

எதிர்கட்சி  எம்.பி.-க்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினர்.இதையடுத்து, அமளில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களான டெரிக் ஓ பிரையன் ,டோலா சென்,காங்கிரஸ் எம்.பி.க்களான ராஜீவ் சதவ் ,நசீர் ஹுசைன் ,ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களான ராகேஷ்,இளமாறம் கரீம்,ஆம் ஆத்மி எம்.பியான சஞ்சய் சிங் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.இதனை செய்யவில்லையென்றால் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழே தனியார் யாரும் கொள்முதல் செய்யக்கூடாது  என்று  அரசு மற்றொரு மசோதா கொண்டு வரவேண்டும் .சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த வழிகளை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய   பின்பற்ற வேண்டும். இந்திய உணவுக் கழகம்  குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழாக கொள்முதல் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.