குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு ! தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும்- திருமாவளவன்

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து  தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்,பாசிச அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. மேலும் வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர் .நீண்ட கால கனவு திட்டங்களை அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொன்றாக செய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தனர்,அவர்கள் நீண்ட கால கனவான ராமர் கோவில் கட்டுவதை அயோத்தியா தீர்ப்பு மூலம் கட்ட உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், ஈழ தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அதனை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினர்.வங்கதேசம் , பாகிஸ்தான், வங்க தேசம்ஆகிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது, மதத்தை, நாட்டை கூறுபோடும் செயலாகும். இன்னும் 4 ஆண்டு நாங்கள் ஆட்சியில் இருப்போம் என்று மக்களவையில் பேசும் போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த குடியுரிமை மசோதா நிறைவேறாமல் இருந்து இருக்கும்.மிக சொற்ப எண்ணிக்கையில் இந்த மசோதா தோல்வி அடைந்து இருக்கும்.குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களை போன்று, தமிழகத்திலும் வலுவான போராட்டத்தை நடத்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று  தெரிவித்தார்.