மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு – பாஜக உண்ணாவிரத போராட்டம்!

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் கணேசன் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், முன்னாள் அகில இந்திய பாஜக செயலாளர் எச்.ராஜா, தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அகில இந்திய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னின்று நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத பட்சத்திலும் தடையை மீறி தஞ்சையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில், தமிழக நீராதாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே கட்டப்படவுள்ள மேகதாது அணை காட்டும் முயற்சியை கர்நாடக அரசு கை விட வேண்டும் எனவும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நிலத்தடி நீரை பாதிக்கும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

author avatar
Rebekal