நிர்வாகம் என்ற நாணயத்தின் மறுபக்கம் எதிர்க்கட்சி – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று, வரும் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதன்பின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக அரசு, தமிழக வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் யாரும் பணிகளை மக்கள் நன்கு அறிவர்.

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மறுபக்கம் எதிர்க்கட்சி. ஆட்சி தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அட்சணியாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி எனும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மன தூய்மையுடனும், கழக கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கழகத்தை கட்டிக்காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும், கழக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்