#BREAKING : இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது – ஈபிஎஸ்..!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்…? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஆனால் ரத்து செய்யவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கும் தயாராகவில்லை.

நீட் தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் தற்கொலை செய்துக்கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம். தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள். மாணவர் தனுஷ் மரணத்துக்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். திட்டமிட்டு மாணவர்களை ஏமாற்றுகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்…? என கேள்வி எழுப்பினார். இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது என கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் அரசு கொண்டு வரும் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும்  நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு. அதில் அங்கம் வகித்தது திமுக என தெரிவித்தார்.

author avatar
murugan