ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தொடரும் போராட்டம் – நள்ளிரவில் முடக்கப்பட்ட இணைய சேவை!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடக்கும் விதமாக நள்ளிரவில் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியதுடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அண்மையில் திடீரென நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். பின் மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒரு வருடத்திற்கு இராணுவ ஆட்சி தான் நடத்தப்படும் எனவும், அதன் பின் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர் கையில் அதிகாரம் கொடுக்கப்படும் எனவும் ராணுவத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆங் சான் சூகியை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ள நிலையில், மியான்மரின் முக்கியமான சில நகரங்களின் வீதிகளில் மக்கள் போராட்டத்தில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளும், ஐநாவும் மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் செய்யக்கூடிய பொது மக்களை ஒடுக்கும் விதமாக மியான்மரின் பல நகரங்களில் ஆயுதமேந்திய ராணுவத்தினரின் போர் வாகனங்களில் உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மியான்மர் மக்களின் போராட்டத்தை குலைக்கும் விதமாக நாடு முழுவதிலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 9 மணி வரையிலும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட வேண்டும் என தொலைதொடர்பு  நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal