One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்துராஷ்டிர செயல் திட்டம் – வைகோ கண்டனம்!

By

Vaiko

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி இந்திய சட்ட ஆணையம் பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நேற்று சிறப்பு குழுவை மத்திய அரசு அமைத்தது.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது. இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

மேலும், செப்டம்பர் 18ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை என பாஜக எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து,  ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை மூலம் சர்வாதிகார  இந்துராஷ்டிரத்தை கட்டமைக்க பாஜக துடிக்கிறது.  மோடி பொறுப்பேற்றதிலிருந்து டெல்லியில் அதிகாரங்களைக் குவித்து வைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது பாஜக எனவும் கூறியுள்ளார்.

மேலும், எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டமாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தைச் செயல்படுத்த மோடி அரசு முனைந்துள்ளது. மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, தனது இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதனைகளை செய்துவருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுவதற்கு, மரபுகளை மீறி குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தை சிறப்பு குழு தலைவராக நியமித்தது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.