ஒரே நாளில் ஒரு கோடி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!

ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை இந்தியாவில், 62,29,89,134 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மட்டும் நேற்று 28.62 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று கர்நாடகா 10.79 லட்சம், மகாராஷ்டிரா 9.84 லட்சம், ஹரியானா 6 லட்சம் மற்றும் மேற்கு வங்கம் 5.47 லட்சம் என நான்கு மாநிலங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பீகார் (4.98 லட்சம்), குஜராத் 4.89 லட்சம், கேரளா 4.84 லட்சம் மற்றும் ராஜஸ்தான் (4.59 லட்சம்) நான்கு மாநிலங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளும், தமிழ்நாடு 3.73 லட்சம், ஆந்திரா 3.24 லட்சம், ஒடிசா 2.67 லட்சம் மற்றும் அசாம் 2.5 லட்சம் என மூன்று மாநிலங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 62.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ள நிலையில், 49.08 கோடி முதல் டோஸ், 14.08 கோடி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி, இந்த மகத்தான மைல்கல்லை எட்டிய இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். அரசு, ஆர் & டி நிர்வாகம், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் கூட்டு முயற்சிகள் காரணமாக இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்