இந்தியாவின் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்: டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்…!

இந்தியாவின் புதிய ஐ.டி சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மே 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,இந்திய பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கு,இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுர் நியமிக்கப்பட்டார்.ஆனால்,அரசின் விதிப்படி,தர்மேந்திர சாதுர் அவர்களின் பெயர்,முகவரி உள்ளிட்டவை டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில்,டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதனையடுத்து,டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர்  பதவி விலகினார்.

அதன்பின்னர்,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ்,முகவரி மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசலை இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து.

.இதனையடுத்து,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தேவைப்படும் வகையில் குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமிக்கத் தவறியதால்,புதிய டிஜிட்டல் விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை.எனவே,தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 79 (1) இன் கீழ்,சட்ட பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க நேரிடும்”,என்று  மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில்,புதிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ்,”டுவிட்டர் நிறுவனம்,அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.மேலும்,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும்,மத்திய அரசின் சட்டத்தை பின்பற்ற வேண்டும்”என்று வலியுறுத்தியுள்ளார்.