பாதுகாப்பு இல்லை : ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம்…!

தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். தற்போதும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணியினர் தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கூறுகையில், தலிபான்களின் முந்தைய ஆட்சியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததாகவும், எனவே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதும் பல வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த கால்பந்து அணி வீராங்கனைகளை பாகிஸ்தான் நாட்டு கால்பந்து சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்னும் சில நாட்களில் இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு விரைவில் அகதிகள் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal