சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏமாற்றி வருவதாகவும், வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக மக்களை ஏமாற்றி விட்டது எனவும் குற்றாடியுள்ளார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி, கர்நாடகா தண்ணீரை தேக்கவும், தடுக்கவும் கூடாது என்று உச்சநீதிமன்றத்திடம் இருந்து தீர்ப்பை பெற்றுத் தந்தது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது என தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றசாட்டி இருந்த நிலையில், இதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, தடுப்பூசிகள் அரசு வீணடிக்கப்படவில்லை என்றும் ஆரம்பத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்