நிதிஷ் குமாரின் தலைமையிலான பீகார் அரசின், ஜாதிவாரி கணக்கெடுப்பு உயர்நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டது.
பீகாரில் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுக்கும் நோக்கில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஆதரவுடன் பீகார் அரசு நடத்திய ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பாட்னா உயர்நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பீகார் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணக்கெடுப்பு நடப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துமாறும், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பாக இருப்பதையும், இறுதி உத்தரவு வரும் வரை தகவல்களை யாருடனும் பகிரப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யுமாறு பீகார் அரசுக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு வரும் ஜூலை 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம், என உயர்நீதிமன்றம் கூறியது.
மாநில சட்டசபையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட தக்வல்களைப் பகிர்ந்து கொள்ள அரசாங்கம் விரும்புவது குறித்தும் நீதிமன்றம் தனது கவலையை தெரிவித்தது.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முதல் சுற்று ஜனவரி 7 முதல் 21 வரை நடத்தப்பட்டது, மற்றும் இரண்டாவது சுற்று ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி மே 15ஆம் தேதி வரை நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமார், இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான தீர்ப்பிற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதம் சமீபத்திய மாதங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்களைக் கணக்கிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்த பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து கூறும்போது இது தனது கொள்கைக்கு எதிரானது என்றும், அது சமூகச் சிதைவு மற்றும் ஜாதிப் பகைமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
உண்மையில் தேவை அதிகம் உள்ளோர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக கொள்கைகளை உருவாக்குவதும் வளங்களை ஒதுக்குவதும் அவசியம் என்று ஜாதிக் கணக்கெடுப்பின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.