நிர்பயா வழக்கு : குற்றவாளி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை

  • தண்டனையை நிறுத்தி வைக்கக்  குற்றவாளி பவன் குப்தா மனுவை தள்ளுபடி  செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
  • உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.அவரது மனுவில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் நடந்த போது தான் சிறுவன் என்றும் எனவே சிறார் சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது,பவன் குப்தா மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது. பவன்  வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா  மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.  மேல்முறையீட்டு மனுவை நாளை உச்ச நீதிமன்றம்  விசாரணை நடத்துகிறது.